09/05/2026
அனைத்து தேவாங்க சமூக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் அதிரடி திருப்பங்களுடன் பரபரத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் சமுதாய மக்கள் கவனித்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயத்தைப் பற்றி எனது மன அழுத்தத்தை நமது சமுதாயத் தலைவர்களுக்கு வெளிப்படுத்துகிறேன்.
அரசியல் ஒரு சாக்கடை. அரசியலில் பயணிக்க, அதிகாரம் பெற மானம் மரியாதை இழந்து போட்டி பொறாமை அவசொற்கள் அசிங்கம் அவமானம் அனைத்தையும் தாங்கி தான் இருக்க வேண்டும்.
ஆனாலும் அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே நமது சமூகத்தை அடுத்த சந்ததியை முன்னெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். அரசியல் அதிகாரம் இன்றி நாம் எதையும் சாதிக்க முடியாது.
ஒரு சில சிறுசமூக மக்கள் கூடி ஒன்றிணைந்து அவரவர்கள் சமுதாயத்திற்கென ஒரு அரசியல் கட்சி அமைத்து சக்தி வாய்ந்த வேறு சில பெரிய அரசியல் கட்சிகளின் துணையுடன் இணைந்து தேர்தல் களத்தில் போட்டியிட்டு MLA,MP சீட்டுகள் பெற்று படிப்படியாக முன்னேறி அரசியலிலும் அதிகாரத்திலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நாம் நமது சமூகத்திற்கு என தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற தனி அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறோமா? எனப் பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏன்?
இந்நிலையில் இன்றைய தமிழக அரசியலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருக்கக் கூடிய ஒரு சிறிய கட்சி இன்று தமிழக அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் பதவியை நிர்ணயிக்கக் கூடிய அளவிற்கு முன்னேறி ஆட்சி அதிகாரத்திலும் பங்கு எடுத்துக் கொள்ள உரிமை கோரி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
நீங்கள் அனைவரும் நம்பித்தான் ஆக வேண்டும். மறுப்பதற்கு இல்லை. ஏனெனில் கண்கூடாக நடப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.அவர்களின் இந்த முன்னேற்றம் எப்படி வந்தது?
ஒற்றுமை. சமுதாய ஒற்றுமை. நான் பெரியவன் நீ பெரியவன் எனும் ஈகோ இல்லாத நிலை. தலைவர் சொல்லுக்கு கட்டுப்படும் மக்கள். சுயநலனை விட சமுதாய நலனுக்கு துணை நிற்கும் எதிர்கால முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள்.
இதையெல்லாம் கவனிக்கும் பொழுது நமது சமூகத்தில் ஏன் இந்த மாதிரியான நிலை,முயற்சி இல்லை எனும் ஆதங்கம் எனக்கு உண்டு.
அதேபோல உங்களுக்கும் ஆதங்கம் இருக்கும் என நம்புகிறேன். நமது சமூக அக்கறை உள்ள அனைவருக்கும் இந்த எண்ணம் ஆதங்கம் கண்டிப்பாக இருக்கும்.
நமது சமுதாய மக்களும் அனைத்து நமது சமூக கிராமத் தலைவர்களும் இதை ஆலோசித்து பார்க்க வேண்டும். ஒருங்கிணைந்து பேசி நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தில் பங்கெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
அப்போதுதான் பல ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் நமது சமூகத்தை
பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும். அரசு பணியில் அரசு நிர்வாகத்தில் நம்மவர்களை பணியில் அமர்த்தி வைக்க முடியும்.
வெவ்வேறு கட்சிகளில் நமது சமூக மக்கள் இருந்தாலும் தேர்தல் அரசியல் என்று வரும்போது நமது சமூக இளைஞர்களும் பெரியோர்களும் தாய்மக்களும் சமூகத்தினருக்கு ஆதரவுடன் செயல்பட வேண்டும். கிராமக் கட்டமைப்பில் இருக்கும் அந்தந்த ஊர் தலைவர்கள் ஊர் மக்கள், இளைஞர்களிடத்தே அதற்கான மனப்பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும்.
நான் இருக்கிறேன், எனக்கு வசதி இருக்கிறது. எனக்கு அரசியல் தேவையில்லை என நினைப்பவர்கள் அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தங்களால் முடிந்த ஆலோசனைகளை ஆதரவுகளை வழங்கி நம் சமுதாயத்தை அரசியலில் ஈடுபடுத்தி அதிகாரத்தில் நிலைபெறச் செய்ய அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு செயல்பட்டால் மட்டுமே நமது சமூகம் அந்தஸ்து அதிகாரம் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் முன்னேறிய சமூகமாக மாறும் என்பதை வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தமிழகம் 🌷
வாழ்க தேவாங்கர் 🌹
வளர்க தேவாங்கர் ஒற்றுமை 🤝🤝