06/08/2026
விழிப்புணர்வுத் தொடர் -02 | 40+ ஆண்களின் ஆரோக்கியம்
40 வயதைக் கடந்த ஆண்களே…
குடும்பத்திற்காக ஓடும் நீங்கள், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனிக்கிறீர்களா?
ஒரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் ஆண்களின் பங்கு மிக முக்கியமானது. தந்தையாக, கணவராக, மகனாக மட்டுமல்லாமல், தொழில் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்றுச் செயல்படும் ஒருவராகவும் அவர் பல கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியுள்ளது. குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகள், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம், வயதான பெற்றோரின் பராமரிப்பு, தொழில் சார்ந்த அழுத்தங்கள், சமூகக் கடமைகள் என அனைத்தையும் கவனிக்கும் பல ஆண்கள், தங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மட்டும் “பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று ஒத்திவைத்துக் கொண்டே செல்கின்றனர்.
ஆனால் 40 வயதுக்குப் பின்னர் அந்த அலட்சியம் தொடரக்கூடாது. ஏனெனில் இந்த வயதிலிருந்து உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, Cholesterol அதிகரிப்பு, உடல் பருமன், Fatty Liver மற்றும் Heart Diseases க்கான அபாயம் படிப்படியாக அதிகரிக்கலாம். இவற்றில் சில ஆரம்பகட்டத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளையே ஏற்படுத்தாமல் இருக்கக்கூடும்.
எனவே “எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்பதற்கும் “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
40 வயதுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்:
BLOOD PRESSURE: அறிகுறிகள் இல்லாவிட்டாலும் Blood Pressure ஐ அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
DIABETES : குடும்பப் பின்னணி, அதிக உடல் எடை / risk factors உள்ளவர்கள் குறிப்பாக FBS / HbA1c பரிசோதனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
CHOLESTEROL& HEART: Lipid Profile உள்ளிட்ட பரிசோதனைகள் தேவையா என்பதை உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். Chest pain வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல் அல்லது ஏற்படும் அசாதாரண சோர்வை அலட்சியம் செய்யாதீர்கள்.
ABDOMINAL CIRCUMFERENCE: 40 வயதுக்குப் பின்னர் உடல் எடையைவிட இடுப்பைச் சுற்றி சேரும் அதிகப்படியான கொழுப்பும் முக்கியமான எச்சரிக்கையாகும். உணவுக் கட்டுப்பாடு மட்டுமன்றி, தொடர்ச்சியான Physical activities உம் அவசியம்.
LIVER HEALTH: Fatty Liver பலருக்கு எந்தத் தெளிவான அறிகுறியும் இல்லாமல் காணப்படலாம். உடல் பருமன், நீரிழிவு மற்றும் அதிக Triglycerides போன்ற metabolic பிரச்சினைகள் உள்ளவர்கள் இதைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.
PROSTATE & KIDNEY: சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிரமம், சிறுநீர் ஓட்டம் பலவீனமாதல், அடிக்கடி அல்லது இரவில் பலமுறை சிறுநீர் கழித்தல் போன்ற மாற்றங்களை வயதின் காரணம் என்று அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனையை பெறுங்கள்.
SEXUAL HEALTH: விறைப்புத்தன்மை அல்லது பாலியல் செயல்பாட்டில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களை மறைத்து வைக்க வேண்டிய பிரச்சினையாகக் கருத வேண்டாம். சில சந்தர்ப்பங்களில் அவை நீரிழிவு, இரத்த நாளப் பிரச்சினைகள், மனஅழுத்தம் அல்லது பிற உடல்நலக் காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
MENTAL HEALTH: “ஆண்கள் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள வேண்டும்” என்ற எண்ணத்தால் மனஅழுத்தத்தைப் புறக்கணிக்க வேண்டாம். தொடர்ச்சியான மனஅழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை உடல் ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கலாம்.
மருந்தை விட முன்னதாக வாழ்க்கை முறையைச் சரிசெய்யுங்கள். 40 வயதுக்குப் பின்னர் ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், ஆரோக்கியமான உடல் எடை, புகையிலை தவிர்த்தல் மற்றும் மனஅழுத்தத்தை முறையாக நிர்வகித்தல் ஆகியவை மிக முக்கியமானவை.
அதேபோன்று வருடாந்த மருத்துவ பரிசோதனையை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பரிசோதனைகள் அவசியமில்லை; வயது, குடும்ப மருத்துவ வரலாறு, உடல் எடை, வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே உள்ள நோய் அபாயங்களைப் பொறுத்து தேவையான பரிசோதனைகளை மருத்துவர் தீர்மானிக்கலாம்.
குடும்பத்திற்காக சம்பாதிப்பது மட்டும் உங்கள் பொறுப்பல்ல.
அவர்களுடன் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதும் உங்கள் பொறுப்புதான்.
40 என்பது முதுமையின் ஆரம்பம் அல்ல; உங்கள் ஆரோக்கியத்தை அதிக பொறுப்புடன் அணுக வேண்டிய வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை.
Dr. Fazl-Ul Haque M. Fouze