Dr. MNF. Mufliha

Dr. MNF. Mufliha Dr. MNF. Mufliha

மட்டக்களப்பில் ஒபரேசன் வாட்டில் வேலை செய்து கொண்டிருந்த போதுஒரு நாள், அதிகாலை 2 மணியளவில் ஒபரேசன் வாட்டின் டெலிபோன் மணி ...
07/08/2026

மட்டக்களப்பில் ஒபரேசன் வாட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது
ஒரு நாள்,
அதிகாலை 2 மணியளவில் ஒபரேசன் வாட்டின் டெலிபோன் மணி ஒலிக்கவே....
உடனடியாக எடுத்து பேசினேன்.
மறுமுனையில் ஈட்டியூ நர்ஸ்...
கடும் வயிற்றுவலியோட 35 வயது மேல் (Male) ட்ரான்ஸ்பர் வந்திருக்கு வாங்க.. டொக்டர்‌... என்று போனை துண்டித்தார்.

வாட்டிலிருந்து அவசரமாக ஓடினேன். வலியில் துடித்துக் கொண்டிருந்த அவருக்கு அவசரமாக வலியை குறைப்பதற்கு தீர்மானிக்க வேண்டிய மருந்துகளை கொடுப்பதற்கு கேட்க வேண்டிய கேள்விகளை அவரிடம் கேட்டுவிட்டு பின்னர் வலியை குறைக்கும் மருந்துகளை கொடுத்து நிலைப்படுத்திய பின்னர்..

சிறிது நேரத்தில் நோவு குறைய ஆரம்பிக்க....
என்ன நடந்தது என கேட்க இனி
நம்மட ஆக்களுக்குகு எல்லாம் அல்சரும் வாயுவும் தானே.....

அவர் சொன்னார் ஒரு கிழமையா அல்சர்....
உங்களுக்கு உடம்புக்கு எப்புடி இருந்து எவடத்த என்ன செஞ்சுது?

இல்ல அல்சர் கூடயும் வாயுக்குளிச போட்டன் குறையல..சக்தியும் வந்திட்டு
மரா உம்மாட்ட அல்சர் குளிசய வாங்கி போட்ட
கொஞ்சம் குறைஞ்ச மாதி இருந்திச்சு...

சரி உங்களுக்கு எவடத்த நோவின?
வவுத்துக்க தான்...

சரி வவுத்துக்கதான்....அது எவடத்த கூட நோவின என்டு ஒரு விரலாலா காட்டுங்க?
பதில்: வவுத்துக்க தான்....

சரி , அப்ப எனனத்துக்கு ஹொஸ்பிட்டல் போன?
வவுரு நோவயும்.

அல்சர் மருந்துக்கு அல்சர் குறைஞ்சிடடு என்டு சொன்னிங்களே?

இல்ல அது உட்டு உட்டு குத்திட்டிருந்திச்சு.
மரா படுக்ககொல உரமா சக்தியும் நோவும் வந்துட்டு....

சரி படுக்ககொல உரமா குத்தின இடத்த காட்டுங்க...
பதில்: அதான் வயித்துல தான் குத்தினன்டு எத்துன தரம் சொல்றன் என்று கோபத்துடன் சொன்னார்.....

நாநோ.... சப்பா... முடியலடா.....
சாமத்தில ஏலான்டு வாரதும்... இப்புடி சம்பவம் செய்றதுமே நம் நாட்டு மக்களின் உலகமகா திறமை என்பது படிக்கும் காலத்திலிருந்தே தெரியுமல்லோ....

இனி கூட வந்த மனைவிய புடிச்சி
வீட்ட இருந்து ஹொஸ்பிட்டல் போக முதல் வயித்தில இந்த இந்த இடங்கள்ல எவடத்த கை வச்சி கத்தினாரு என்டு கேட்டா இனி அவலும் பாக்களியாம் என்டு பதில் சொல்ல....

சரி விடுங்கோ.... ஈட்டீயுக்கு நான் வரக்கொல சுருண்டுட்டு கைஇருந்த இடத்த பாத்தா ஒன்டு‌பித்தக்கல் அல்லது சதைய அழற்சியாகத்தான் இருக்கோணும்... என முடிவெடுத்துக்கொண்டு...

சரி இனி நோவு கூடி குறைஞ்சுதா,
குத்திச்சா?
முன்னுக்கு குனிஞ்சா குறைஞ்சுதா?
சாராயம் குடிக்குரயா?
இப்புடி இதுக்கு முதல் வந்தயா?
என இன்னும் பல பல கேள்விகளுக்கு மள்ளுக்கட்டி விடை பெற்று சதைய அழற்சி தான் காரணம் என்று முடிவுக்கு வந்து பரிசோதனைகளையும் செய்தால் அதுவும் அதனையை உறுதி செய்ய
டெஸ்டுகளும் அதனையே உறுதி செய்தன....

#சதைய #அழற்சி
சதையும் எமது உடலில் உள்ள முக்கியமான ஹோர்மோன்கள் மற்றும் சமிபாட்டு நொதியங்களை சுரக்கும் ஒரு சுரப்பியாகும்.

சதைய அழற்சியானது திடீரென முதன்மதலாக தாங்க முடியாத வலியுடன் அல்லது நீண்டகாலமாக சிறுசிறு நோவாக இருந்து காலப்போக்கில் அதிகரித்த போவதாக ஏற்படலாம்.

முக்கிய காரணங்கள்
1. பித்தப்பை கற்கள்
2. சாராயம் அருந்துதல்
3. கொலஸ்ட்ரோல்
4. சில மருந்துகள் (நாட்டு மருந்து/ ஆயுள் வேதம்/ ஆங்கில மருந்து)
5. வயிற்றில் அடிபடுதல்
6. கிருமித் தொற்றுகள்
6. சிலருக்கு காரணம் இன்றி (Idiopathic)

அறிகுறிகள்
1.மேல் வயிற்றில் கடுமையான வலி. அந்த வலி முதுகிற்குப் பரவலாம்.

2. குமட்டல் மற்றும் வாந்தி
3. காய்ச்சல்
4. வயிறு உதவுதல்
5. அஜீரணம்
6. கடுமையான நிலையில் ப்ரஸர் குறைதல்
7. சுவாசிக்க சிரமம்

காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை மாறுபடும்.

உரிய நேரத்திற்கு சிகிச்சை பெறாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்
1. சதையும் இறந்து போகும். இறக்கும் அளவுக்கு ஏற்ப இதனால் சீனி நோய், உயிராபத்து
2. சதையத்தில் கட்டிகள் உருவாகும்
3. மலையகத்தில் கிருமித்தொற்று
4. மலையகத்தில் தொற்றிய கிருமி இரத்தத்தில் பரவி உயிர் ஆபத்து
5. கிட்னி, ஈரல், இதயம் மற்றும் மூளை போன்ற ஏனைய உறுப்புகள் பல செயலிழந்து உயிராபத்து

உரிய நேரத்திற்கு வைத்திய ஆலோசனை பெற்று அவற்றை செயற்படுத்துவதன் மூலம் பாதகமான விளைவுகளை தடுக்கலாம்.

நன்றி
டொக்டர்: MNF. முப்லிஹா
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

மட்டக்களப்பில் வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நல்லிரவில் அட்மிட் ஆனார். என்ன பிரச்சினை?அல...
02/08/2026

மட்டக்களப்பில் வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நல்லிரவில் அட்மிட் ஆனார்.

என்ன பிரச்சினை?
அல்சர் கூடி வந்த..
சரி உங்களுக்கு என்ன செய்யுது?
வழமையான அல்சர் தான் இப்ப கூடிட்டு...

சரி உங்களுக்கு என்ன செய்யுது இப்ப?
நேத்து கல்யாண ஊடொண்டு போய் சாப்டதில இருந்து கொஞ்சம் அல்சர் கூடிட்டு.....

சரி அல்சருக்கு மருந்து தாரன்
உங்களுக்கு இரைப்பைலயா குடல்லயா அல்சர் என்டு பாத்துதானே மருந்து தரனும் .
அதுக்கு‌ நான் கேட்குறதுக்கு பதில் சொன்னாதானே தெரியும் என்றதும்...
ஓ அப்பிடியுமா இரிக்கி...
இவடத்ததான் நோவுற என்றார்...

இனி எல்லாம் கேட்டு பாத்தா அது வித்தியாசமாக வேறு ஏதோ ஒன்றினால் இருக்கும் என்று உறுதியாக...

இனி எல்லாம் பேசி முடிஞ்சு ஒரு முடிவுக்கு வந்தா .... அது பித்தப்பை கல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை காட்டியது....
உங்களுக்கு பித்தப்பை கல் இருக்கலாம் ஸ்கான் ஒன்டு செய்வோம் என்டு சொன்னதும் அதெல்லாம் இல்ல அல்சர் தான் என்று முழித்துக் கொண்டே சரி என்றார்.

இனி அடுத்தநாள் ஸ்கான் செய்தாள்
அம்மணிக்கு அந்த பித்தப்பை கல்தான் பிரிச்சினை.....

#பித்தப்பை #கற்கள்
பித்தப்பையில் உள்ள பித்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அல்லது பிலிருபின் போன்ற பொருட்கள் கற்களாக உருவாகும் நிலை.

அறிகுறிகள்
1.வலது மேல் வயிற்றில் திடீர் வலி ஏற்படல்.
2.அந்த வலி வலது தோள் அல்லது முதுகிற்கு பரவுதல்
3.கொழுப்பு அதிகமான உணவு சாப்பிட்ட பின் வலி அதிகரித்தல்
4.குமட்டல், வாந்தி
5.காய்ச்சல் (கிரிமித் தொற்று ஏற்பட்டால்)
6.கண் மஞ்சளாதல் (கல் பித்தக் குழாயில் அடைந்தால்)

ஆபத்து காரணிகள்
1. பெண்களுக்கு அதிக வாய்ப்பு
2. 40 வயதுக்கு மேல்
3. அதிக உடல் பருமன்
4. கர்ப்பம்
5. நீரிழிவு
6. பரம்பரை
7.விரைவாக உடல் எடை குறைதல்

மேற்கூறிய அறிகுறிகள் இல்லாமல் வேறு காரணங்களுக்காக சில பரிசோதனைகள் செய்யப்படும்போது கண்டுபிடிக்கப்படும் கற்களுக்கு பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை.

வலி அல்லது சிக்கல்கள் இருந்தால்: பித்தப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை சிறந்த சிகிச்சையாகும்.

பித்தக் குழாயில் கல் இருந்தால் ERCP மூலம் அகற்றப்படலாம்.

உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டிய அறிகுறிகள் எவை?

1.குறையாத கடுமையான வயிற்றுவலி
2.காய்ச்சல் மற்றும் நடுக்கம்
3.கண்கள் அல்லது தோல் மஞ்சள் நிறமாகுதல்
4.தொடர்ச்சியான வாந்தி.

நன்றி
டொக்டர்: MNF. முப்லிஹா
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை.

கார்பங்கிள் (Carbuncle) கார்பங்கிள் என்பது எமது தோலின் முடியின்  அடிப்பகுதிகள் பல ஒன்றாக பற்றீரியா  தொற்றுக்குள்ளாகி, தோ...
02/08/2026

கார்பங்கிள் (Carbuncle)

கார்பங்கிள் என்பது எமது தோலின் முடியின் அடிப்பகுதிகள் பல ஒன்றாக பற்றீரியா தொற்றுக்குள்ளாகி, தோலின் ஆழமான பகுதியில் ஏற்படும் சேழ் கட்டி ஆகும்.


காரணங்கள்
1. நீரிழிவு நோய்
2.நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
3. தோலை முறையாக பராமரிக்காமை
4. அதிக உடல் பருமன்
5. தோலில் காயங்களுக்கு முறையாக சிகிச்சை பெறாமை

அறிகுறிகள்
1. நோவுடனான சிவந்த வீக்கம்
2. சேழ் வெளியேறுதல்
3. காய்ச்சல்
4. உடல் சோர்வு
5 நெறி விடுதல்

எந்த இடங்களில் பொதுவாக ஏற்படும் ?
1.கழுத்தின் பின்புறம்
2.முதுகு
3.தொடைகள்
4. அக்குள் பகுதி
5. பின்புறம்

சிகிச்சை
பொருத்தமான மருந்துகள் வழங்கப்படும்
சேழ் அதிகமாக இருந்தால் கட்டை வெட்டி சேழ் வெளியேற்றப்படும்.

முறையாக சிகிச்சை பெறாமையால் ஏற்படும் பாதிப்புகள்.
1.Cellulitis
2. உடலினுள்ளே கிருமி சென்று உயிர் ஆபத்து.
3. தழும்பு (Scar) உருவாகுதல்

வராமல் தடுக்க/ ஆபத்தை குறைக்க என்ன செய்யலாம்?
1.உடலை சுத்தமாக வைத்திருத்தல்
2.கைகளை அடிக்கடி கழுவுதல்
3. காயங்களுக்கு முறையான வைத்திய ஆலோசனை
4. சீனியை கட்டுப்படுத்துதல்
5. ஏனையோரின் சோப், ஆடைகள், டவல், ரேசர் போன்றவற்றைப் பகிர்ந்து பயன்படுத்தாதிருத்தல்

குறிப்பு : உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் பாதகமான விளைவுகளை தடுக்கலாம்.

நன்றி
டொக்டர்: MNF. முப்லிஹா
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

அன்மையில் ஒருவர் வந்து... வயிற்றுவலி என்டு இரவு போன எங்கட பிள்ளைக்கி சாப்பாடும் குடுக்காம விடிய விடிய வெச்சிருந்து ஸ்கான...
21/05/2026

அன்மையில் ஒருவர் வந்து...
வயிற்றுவலி என்டு இரவு போன எங்கட பிள்ளைக்கி சாப்பாடும் குடுக்காம விடிய விடிய வெச்சிருந்து ஸ்கான் பன்னி என்னமோ அபென்டிஸ் வெடிச்சயாம் என்டு திரும்பயும் சாப்பாடு குடுக்காம வச்சிருக்கு... பிறகு ஒபரேசன் பன்னிட்டு வந்தும் ஒன்டும் குடுக்க உடல.....
என்னமன இப்புடி பட்டினி போட்டு வச்சிருக்காங்க... என ஏதோ தனது உறவினருக்கு உணவு வழங்காமல் அனியாயம் நடந்தது போல கூறினார்.

ஏதேனும் சத்திர சிகிச்சை செய்யப்பட இருக்கும் போது‌ முள்ளந்தண்டில் விறைப்பு மருந்து வழங்கி உடலின் கீழ்ப் பாகத்தில் நோவு தெரியாமல் செய்து அல்லது இரத்தத்தின் ஊடாக மயக்க மருந்து வழங்கி முற்றாக மயக்கி அல்லது இன்னும் சில வேளைகளில் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் விறைப்பு மருந்து வழங்கி சத்திர சிகிச்சை வழங்கப்படும் போது
ஒருவரது வயது, உடல் நிலை, நீண்டகால பிரச்சினை, சத்திர சிகிச்சைக்கான அவசியத்தை ஏற்படுத்திய காரணம் என்பவற்றை பொருத்து சத்திர சிகிச்சைக்கு முன்னரும், பின்னரும் பொதுவாக திண்ம உணவுகளுக்கு 6 மணித்தியாலங்களும்,
திரவங்களுக்கு 4 மணித்தியாலங்களும், தண்ணீருக்கு 2 மணித்தியாலங்கள் அல்லது முன்னரே கூறியது போல உடல்நிலைக்கும் வயதுக்கும் ஏற்ப நீண்ட நேரமோ பட்டினி வைத்தே சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

சத்திர சிகிச்சைக்கு பின்னர் மேலும் பொதுவாக 4 தொடக்கம் 6 மணித்தியாலங்கள் பட்டினி வைக்கப்படும். சில நேரங்களில் ஸ்கான், சீட்டி, மற்றும் வேறு சில பரிசோதனைகளுக்காகவும் இவ்வாறு பட்டினி வைக்கப்படும்.

ஆனால் வைத்தியசாலைக்கு வந்தவுடன் நம்மவர்கள் நினைப்பது.... ஆப்பிள், ஒரேஞ் மற்றும் திராட்சைப்பழத்தையும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் உடனடியாக நோய் குணமாகிவிடும்.
இவர்கள் அனியாயமாக நமது உறவினர்களை பட்டினி போட்டுள்ளார்கள் என்ற மேலதிக என்னம் வேறு....‌... அவர்கள் மட்டுமல்ல சிலவேளைகளில் வாட்டுக்குள் வேலை செய்யும் சக ஊழியர்கள் கூட புரிந்து கொள்வதில்லை..... ஒபரேசன் தியேட்டரினுள் உணவு தண்ணீர் இல்லாமல் ஓய்வின்றி ஒபரேசன் செய்பவர்களுக்கு கோல் எடுத்து இன்னார்ட ஆக்கள் கேட்காங்க அவங்கள எத்தன மணிக்கு தியேட்டருக்கு எடுப்பிங்க? சாப்பாடு குடுக்கயா என்டு என.......

இவ்வாறு ஒருவரை பட்டினி வைத்திருப்பதனால் எந்த ஒரு சுகாதார சேவை வழங்குனருக்கும் எந்த ஒரு நன்மையும் இல்லை...
பலர் நினைப்பது போல உணவு தண்ணீர் இல்லாமல் நாள் முழுக்கு சத்திர சிகிச்சை செய்வதனால் அதற்காக வைத்தியர்களுக்கு சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலதிக கொடுப்பனவு எதுவும் இல்லை...

அப்படி எனில் ஏன் அவ்வாறு பட்டினி வைக்கிறார்கள்?
பொதுவாக மயக்க மருந்துகளுக்கு வாந்தியை ஏற்படுத்தும் தன்மை உண்டு. அத்தோடு அது உங்களது உணவுப் பாதையின் இறுக்கிக் தசைகளை தளர்த்துவதோடு குடல் அசைவுகளையும் குறைக்கும்.
எனவே சத்திர சிகிச்சையின் போது அல்லது அதற்கு பின்னர் வாந்தி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
அவ்வாறு வாந்தி ஏற்படும்போது அது உங்களது மூச்சுக்குழாயினுள் சென்று உயிராபத்தை ஏற்படுத்தும்.

குடலில் அல்லது குடலை அண்டிய பகுதிகளில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும்போது குடலில் உள்ள உணவு அல்லது மலம் உங்களது வயிற்றினுள் கசிய வாய்ப்பு உண்டு.
அதனால் ஏற்படும் பாதிப்பினால் வயிற்றினுள் கிருமி தொற்றுதல், காயங்களில் கிருமி கொற்றுதல், மற்றும் உயிராபத்து உண்டு....

சுருக்கமாக கூறினால்‌: உங்கள் உயிரைக் காப்பதற்கே உங்களது உணவு மற்றும் பானத்தை தியாகம் செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டால் சத்திர சிகிச்சை வாட்டுக்களில் ஏற்படும் தேவையற்ற முரன்பாடுகள் பெருமளவில் தவிர்க்கப்படும்..... அத்தோடு‌ உங்களுக்கு யாரும் தீங்கிழைக்கவில்லை மாறாக உங்களுக்கு நல்லதே செய்கிறார்கள் என்ற புரிந்துணர்வு ஏற்படும்....

நன்றி
டொக்டர்: ‍MNF: Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

கடந்த வருடத்தில் ஒருநாள் இரவு 11.30 மணியளவில் யாரோ எங்கள் வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டது.யார் என பார்த்த போது..பக்கத்...
11/05/2026

கடந்த வருடத்தில் ஒருநாள் இரவு 11.30 மணியளவில் யாரோ எங்கள் வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

யார் என பார்த்த போது..
பக்கத்து வீதியில் உள்ள தெரிந்த ஒருவர் வெளியூரிலிருந்து சுற்றுலா வந்த அவரது உறவினர் ஒருவரின் பிள்ளைக்கு வயிற்று வலி என அழைத்து வந்திருந்தார்.

உள்ளே அழைத்து என்னம்மா என கேட்க...
அவரது 12 வயது பிள்ளையை காட்டி
இவக்கு அல்சர் வார..... இனி நாங்க பிரயாணம் ஒன்டுல நிக்கம்.... வார வழில எல்லாம் ஹோட்டல் ல சாப்டதால அல்சர் கூடிட்டு....

காலைல நேரத்தோட சிகிரியா போய்ட்டு அங்க இருந்து நுவரெலியாக்கு போரம்...
ஆளுக்கு வழமையா குடுக்குற அல்சர் மருந்தெல்லாம் குடுத்து பாத்த ஆனா நிக்குதில்ல சரியா நோவுதாம்....
ரெண்டு தரம் சத்தியும் எடுத்துட்டா...
என்றார்...

கேட்கவேண்டிய ஏனைய கேள்விகளை கேட்டு தேவையான பதிலை அறிந்து கொண்ட பின்னர்.... பிள்ளையை பரிசோதித்த போது அது அபன்டிசைடிஸ் என்பது தெளிவாகியது.....
பிள்ளையை நான் சோதித்த போது பிள்ளைக்கு காய்ச்சலும் இருந்தது.
அதனை சொன்ன போது.... இனி இண்டைக்கு பாசிக்குடால குளிச்சதான அதான் உடம்பு சூடா இருக்கு போல என்றார் தாயார்...

அப்படி இல்லம்மா பிள்ளைட நிலமை கொஞ்சம் சீரியஸ்.... அப்பன்டிசைடிஸ் வந்திரிக்கு... உள்ள அது வெடிச்சிரிக்க வாய்ப்பிருக்கு.... பிள்ளைய உடன அட்மிட் பன்னி ட்ரீட்மென்ட் செய்யனும் என்றதும் சரி அப்ப விடுங்க போரம் என சளித்துக்கொண்டு சென்றவர்கள் அன்று இரவு வீட்டில் வைத்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அடுத்த நாள் அதிகாலை சுற்றுலாவை தொடர்ந்துள்ளார்கள்....

பொலநறுவையை அன்மித்த போது பிள்ளைக்கு காய்ச்சலும் அதிகரித்து மயக்க நிலை ஏற்படவே வேறு வழியின்றி ஹொஸ்பிட்டலுக்கு பிள்ளையை எடுத்துச் சென்றுள்ளார்கள்.
அங்கே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உடனடியாக தேவையான அனைத்தையும் செய்து சத்திர சிகிச்சையும் செய்து ஐசீயூவிலும் வைத்து சிகிச்சை வழங்கி பின்னர் வாட்டுக்கு மாற்றி சிகிச்சை வழங்கி அதிஷ்ட்டமாக உயிர் பிழைத்து வீடு திரும்பியுள்ளார் அந்த பிள்ளை....

எதேற்சையாக சில தினங்களுக்கு முன்னர் ஒரு இடத்திற்கு சென்றிருந்த போது அங்கே அந்த பிள்ளையும் குடும்பமும் வந்திருந்தார்கள். என்னை கண்டதும் அந்தப் பிள்ளையும் தாயாரும் வந்து பேசிய பின்னரே என்னுடன் பேசிவிட்டு சென்ற பின்னர் நடந்த முழு சம்பவமும் எனக்கு தெரிய வந்தது....

#அபென்டிசைடிஸ்
பெருங்குடலின் ஆரம்பப் பகுதியில் உள்ள ஒரு பகுதியே அபென்டிக்ஸ் எனப்படும் குடல்வளரி ஆகும்.

மலம், புழுக்கள், நிணநீர்கணுக்களின் வீக்கம், குடல் கட்டிகள் மற்றும் இன்னும் பல காரணங்களால் இந்த பகுதியில் அடைப்பு ஏற்படும்போது‌ அதனுள் கிருமி பெருகும்.

இதனால் வயிற்றுவலி ஏற்படும். பொதுவாக அந்த வலி ஆரம்பத்தில் தொப்புள் பகுதியை சூழ ஏற்பட்டு பின்னர் வலது பக்க அடி வயிற்றை நோக்கி அமையும். நடக்கும் போது, இருமும் போது அல்லது வேலைகள் செய்யும்போது வலி அதிகரிக்கும்.

வலியுடன் சேர்ந்து உடல் சோர்வு, பசியின்மை, வயிற்று குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம்.

குறிப்பு: சில வேலைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயாளியை பரிசோதிப்பதன் மூலம் உறுதியாக கூற முடியாது. அதிலும் குறிப்பாக குழந்தைகள்ளில் பரிசோதித்து கண்டறிவது சிலநேரம் கடினமாக அமையும். ஏனெனில் அவர்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்க மாடிடார்கள்.

எனவே ஸ்கான் போன்ற பரிசோதனைகளும் இரத்தப் பரிசோதனைகளும் தேவைப்படும்.

ஆரம்ப கட்டத்தில் மருந்துகள் மூலம் சில நேரங்களில் குணமடையும் (ஏற்பட்டதற்கான காரணத்துக்கு ஏற்ப).

ஆனால் அவ்வாறு சரிவராத போது அல்லது சரிசெய்ய முடியாத காரணங்களால் ஏற்படும் போது அல்லது தாமதமான நிலையில் வைத்திய உதவியை நாடும்போது‌ அது வெடித்து வயிற்றினுள் கிருமி பரவி உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்...

எனவேதான் உரிய வேலைக்கு வைத்திய ஆலோசனைகளை பெறுவது சிறந்தது......

நன்றி
டொக்டர்: MNF. MUFLIHA
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

 #தோல் மட்டுமன்றி #நகமும் பேசும்சென்ற வருடம்‌ தாயார்‌ ஒருவர்‌ அவரது 15 வயது பிள்ளையை அழைத்து வந்திருந்தார்.உள்ளே அழைத்து...
08/02/2026

#தோல் மட்டுமன்றி
#நகமும் பேசும்

சென்ற வருடம்‌ தாயார்‌ ஒருவர்‌ அவரது 15 வயது பிள்ளையை அழைத்து வந்திருந்தார்.

உள்ளே அழைத்து என்னம்மா பிரச்சினை என கேட்க...
கொஞ்சம் இவள செக் பன்னுங்க மன... இவளுக்கு என்ன நடந்தயோ தெரியா....
வெளியூர்ல ஹொஸ்ட்டல்ல நின்டவள் இப்ப கொஞ்ச நாளாக ஒரே சோர்வாக இருக்காளாம், அடிக்கடி தலைவலி என்டு சொல்லி தூங்குறாளாம்‌ என்டு சொல்லையும் இனி நோன்பு தானே என்டு இப்பதான் கூட்டி வந்த. கூட்டி வரக்கொல என்ட மடில படுத்தவள்ட முதுகுல என்ட கை படயும் நோவுது என்டு சொன்னாள்.

ஏன் நோவுது என்டு கேட்டதுக்கு தெரியா என்டு சொன்னாள்.

வீட்ட வந்து முதுகை பார்த்தா சிவத்து சிவத்து இருக்கு.. யாரும் அடிச்சயா என்ன நடந்த என்டு என்னத்த கேட்டாளும் ஒன்டுமில்ல என்டுதான் சொல்றாள்.

சின்னப்பிள்ளலா மன... எனக்கி பயமா இரிக்கு, என்ன செய்ற என்டும் விளங்குதில்ல...
இப்ப அங்க இஞ்ச நடக்குற விஷயமெல்லாம் கேள்விப்படக்கொல எனக்கி தலையெல்லாம் கிறுவுதுமன என பதறினார் தாயார்.

தாயாரை சமாதானப்படுத்தி விட்டு
ஒருவாறு பிள்ளையோடு பேசிய போது தாயார் பதற்றபடும் வகையில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இனி பரிசோதித்து பார்த்தால்....
அதுவோ வட்டக்கடி.......
பயப்படாதிங்கம்மா...
நீங்க பயப்படுரமாதிரி வேற ஒண்டுமில்ல.....
இது ஒரு பங்கசு தொற்று தான்...... குணமாக்கிடலாம் என்றதும்......

என்ட மனச குளிர வச்சிட்டய் மன என தாயார் விட்ட ஆனந்தக் கண்ணீரை பார்த்தபோது எனக்கும் கண் கலங்கியது....... தாய்மையின் அன்பு அதுவன்றோ......

#தோலும் நகமும் டொக்டருடன் பேசுகின்றன

#படர்தாமரை/ #வட்டக்கடி
இது ஒரு பங்கசு தொற்று ஆகும். உடலில் இது ஏற்படும் இடத்திற்கு ஏற்ப பல வகைகளாக பெயரிடப்படும்.

பொதுவாக உடலில் எல்லா பகுதிகளிலும் ஏற்படும் ஆற்றல் கொண்டது.
எந்த ஒருவருக்கும் இந்த தொற்று ஏற்படலாம்.

எனினும் சிலருக்கு தொற்றும் வாய்ப்பு ஒப்பீட்டளவில் அதிகம்.
உதாரணமாக:
1. பரம்பரை காரணிகளால் நோயெதிர்ப்பு சக்தி பலகீனமானவர்கள்.
2.சீனி நோயாளிகள்.
3.புற்றுநோய் உள்ளவர்கள்.
4.சில மருந்துகளை தொடர்ச்சியாக பாவிப்பவர்கள் (உதாரணமாக: ஆத்ரைடிஸ், SLE, புற்றுநோய் மருந்துகள்)
5.சில ஓமோன் குறைபாட்டு நோய் உள்ளவர்கள்
6.வயோதிகர்கள்
குழந்தைகள், சிறுவர்கள்
7.அதிக வியர்வை
8.ஹொஸ்ட்டல், சிறைச்சாலை (ஒருவரில் இருந்து அடுத்தவருக்கு தொற்றுதல்)
9. தொற்றுள்ளோருடன் வசிப்பவர்கள் மற்றும் பழகுபவர்கள்.

எவ்வாறு பரவுகிறது
1. நோய்த்தொற்றுள்ள ஒருவரில் இருந்து அடுத்தவருக்கு தொற்றும்
உதாரணமாக: சேர்ந்து விளையாடுதல், உண்ணுதல், ஆடைகளை அருகருகே காயவைத்தல், மடித்து வைத்தல்.

விளையாட்டு உபகரணங்கள், ஜிம் உபகரணங்கள், தளபாடங்கள், நீர்த்தடாகம் போன்ற எல்லா இடங்களிலும் பரவும் தன்மை உள்ளது.

ஒருவரது ஆடை, டவல், சீப்பு, சிகை அலங்கார கிளிப்புக்கள் போன்றவற்றை இன்னுமொருவர் பயன்படுத்துதல்.

தொற்றுள்ளவரின் பாய், தலையனை, பெட் சீட், பெட்டில் தூங்குதல்.

2. தொற்றடைந்த செல்லப்பிராணி மற்றும் ஏனைய விலங்குகளில் இருந்து தொற்றுதல்.
உதாரணமாக: நாய், பூனை, முயல், ஆடு, குதிரை, பன்றி......

3. தொற்றடைந்த மண்ணிலிருந்து தொற்றுதல்:

தொற்றின் அறிகுறிகள் என்ன?
தொற்றின் அறிகுறிகள் தொற்று ஏற்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ப மாறுபடும்.
1. டீனியா பீடிஸ் (பாதத்தில் ஏற்படும் வட்டக்கடி) இன் அறிகுறிகள்:
பாதம்/ விரல் இடுக்குகளில் காயம் அல்லது ராஸ். அத்தோடு அது‌ சொரிச்சலாகவும், எரிவாகவும் இருக்கலாம்.

விரல் இடுக்குகளில் தோல் வெள்ளையாக உரிதல்.

பாதங்களில் நீர்ச்சிறங்கு போல் கட்டிகள் உருவாகி வெடித்தல்.

2. டீனியா க்ரூரிஸ் (தொடை, பிறப்புறுப்பு மற்றும் பிட்டம் பகுதிகளில் ஏற்படுவதை குறிக்கும்)

3. டீனியா கபிடிஸ் (தலை முடி மற்றும் தலையின் தோலில் ஏற்படும் பாதிப்பை குறிக்கும்.)
தலையில் ராஸ், சொறிச்சல், தலை முடி உதிர்தல், நெறிக்கட்டிகள் வீக்கம் என்பன ஏற்படும்.

4. டீனியா அங்குயம்/‌ஒனிகோமைகோஸஸ் என்பது நகத்தில் ஏற்படும் வட்டக்கடி ஆகும்.
நகங்களின் நுனிப்பகுதிகள் தடித்தல், வெடிப்பு ஏற்படல், நகம் மஞ்சள் நிறமாகுதல் போன்றன‌ ஏற்படும்.

5. டீனியா கோப்போரிஸ் என்பது உடலில் உரோமங்கள் அற்ற மேலே சொல்லப்படாத பகுதிகளில் ஏற்படும் வட்டக்கடி ஆகும்.
இதன் அறிகுறிகளும்‌ சொறிச்சல், எரிவு, ராஸ் என்பனவே....

ஏற்பட்டுள்ள இடம், அளவு, தன்மை, வயது, ஏனைய நோய் நிலைகள், கற்பம், தாய்ப்பாலூட்டல் போன்ற பல காரணங்களின் அடிப்படையில் தொற்றின் தாக்கம் மற்றும் சிகிச்சை மாறுபடும்.

சிகிச்சைக் காலப்பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்
1. தொற்றுள்ள இடத்தை சொறியக்கூடாது. இது ஏனைய இடங்களுக்கு பரவத் தூண்டும்
2. மருந்துகளை முறையாக‌ பாவிக்க வேண்டும். உரிய சிகிச்சை முடியும் வரை விடாமல் பாவித்தல்.
3. பூசும் மருந்துகளை தொற்று ஏற்பட்ட‌ இடத்தில் பாவிக்க முன்னரும் பாவித்த பின்னரும் சவர்க்காரமிட்டு கைகளை இளம் சூடான நீரால் கழுவுதல்.
4. ஏனையவர்களுக்கு பரவாது பாதுகாத்தல்.
5. குளிக்கும் போது சவர்க்காரமிடும்போது‌ உடலின் ஏனைய பகுதிகளுக்கு சவர்க்காரமிட்டு இறுதியாக தொற்றுள்ள பகுதிக்கு சவர்க்காரமிட்டு கழுவுதல்

6. தொற்றுக்குள்ளான உடல் பகுதியை துடைப்பதற்கு தனியான துணியை பயன்படுத்துதல். பின்னர் அந்த துணிகளை சுடுநீரில் கழுவி சூரிய வெப்பத்தில் நன்றாக காய விடல்.

7. தொற்றுள்ள இடத்தை சுத்தமாகவும் ,உலர்வாகவும் வைத்திருத்தல்.

8. வெளியில் பாதணிகள் அணிதல்.
9. சுத்தமான, அதிக இறுக்க மில்லாத பருத்தி உள்ளாடைகள் மற்றும் வெளி ஆடைகள் அணிதல்.
10. தொற்றுக்குள்ளான செல்லப் பிராணிகளை குணப்படுத்துல், அவற்றுடனான நெருக்கத்தை தவிர்த்தல்.

முறையான சிகிச்சை மற்றும் பழக்கவழக்கங்கள் ஊடாக இதனை பூரணமாக குணப்படுத்துவதோடு‌ ஏனையோருக்கு பரவாமலும் கட்டுப்படுத்தலாம்.

நன்றி
டொக்டர் MNF.Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

 #தோல்  #பேசுகிறதுஎகான்தோஸிஸ் நைகிரிகன்ஸ் என்பது வெல்வெட் போன்ற, தடிப்பான, கரிய நிற தோல் மாற்றம் ஆகும். பொதுவாக இயற்கையா...
08/02/2026

#தோல் #பேசுகிறது

எகான்தோஸிஸ் நைகிரிகன்ஸ் என்பது வெல்வெட் போன்ற, தடிப்பான, கரிய நிற தோல் மாற்றம் ஆகும். பொதுவாக இயற்கையாக தோல் மடிப்புகள் ஏற்படும் பகுதிகளில் இது ஏற்படும்.
உதாரணமாக: கழுத்தின் பின்பகுதி, அக்குள், தொடை பகுதி.

பரம்பரை காரணிகள், ஓமோன் பிரச்சினைகள், ஓட்டோ இமியூன் நோய்கள் மற்றும் பாரதூரமான புற்றுநோய்களால் இது ஏற்படலாம்.

ஏற்படுவதற்கான‌ காரணத்துக்கு ஏற்ப இது பல வகைகளாக பிரிக்கப்படும்.

1. பரம்பரை ரீதியானது:
பரம்பரை அலகில் ஏற்படும் ஒரு மாற்றமானது குடும்பத்தில் எல்லோருக்கும் கடத்தப்படும். இதனால் பரம்பரை எல்லோருக்கும் அல்லது அதிகமானோருக்கு இருக்கும்.

2. அதிக உடற்பருமனுடன் தொடர்பானது:
உடலின் இன்சுலின் உனர்திறன் குறைவடைவதால் ஏற்படுகிறது.

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் உடல் நிறை கட்டுப்பாட்டின்‌ மூலம் குணமடையும் வாய்ப்பு அதிகம்.

அதனையும் தான்டி மருந்துகள் தேவைப்படுவோருக்கு‌ இன்சுலின் தேவைப்படலாம்.

3. சில மருந்துகளின் பாவனையினால்‌ஏற்படும் தற்காலிக மாற்றங்கள்: இவ்வகைக்கு பொதுவாக வேறு எந்த சிகிச்சையும் தேவையில்லை. குறித்த மருந்துகளின் பாவனையை நிறுத்திய பின்னர்‌ சிறிது காலத்தில் மறைந்துவிடும்.

4. ஓமோன் சுரப்பிகளில் ஏற்படும்‌ மாற்றங்களால் ஏற்படும் வகை:
உதாரணமாக: சீனி நோய், அதிக உடற்பருமன், பொலிஸிஸ்டிக் ஓவரி, S.L.E. போன்ற நிலைகளால் ஏற்படும்.

உரிய நோய்க்குரிய சிகிச்சையை பெற்று நோயை கட்டுப்படுத்தும் போது குறைவடையும்.

5. அக்ரல் அகாந்தோட்டிக் அநோமலி:
மூட்டு மடிப்புகள் மற்றும் பாதத்தின் மேல் பகுதியில் காணப்படும். பொதுவாக தோல் நிறம் அதிகமானோரில் (Dark skin) இது காணப்படும்.

6. ஓட்டோ இமியூன் நோய் காரணமாக ஏற்படுவது:
உதாரணமாக: SLE, தைரொய்ட், சதையை நோய்கள்.

7. புற்றுநோயின் தாக்கத்தினால் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுவது:
உதாரணமாக: உணவுப் பாதை, சிறுநீரகம் மற்றும் சனனித்தொகுதி‌யில் ஏற்படும் புற்றுநோய், மார்பு, சுவாசப்பை, நிணநீர்கட்டிகளில் ஏற்படும் புற்றுநோய்களின் தாக்கத்தின் போது ஏற்படுபவற்றை குறிப்பிடலாம்.

நன்றி
டொக்டர்‌: MNF. Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

வெள்ள அனர்த்த காலத்தில் இரத்த வங்கிகளில் இரத்தம் தட்டுப்பாடு என்பதாலும் இன்னும் பல காரணங்களுக்காகவும் கற்பவதிகள் முன்னாய...
30/12/2025

வெள்ள அனர்த்த காலத்தில் இரத்த வங்கிகளில் இரத்தம் தட்டுப்பாடு என்பதாலும் இன்னும் பல காரணங்களுக்காகவும் கற்பவதிகள் முன்னாயத்தமாக உரிய நேரத்துக்கு ஹொஸ்பிட்டலுக்கு அட்மிட்‌ ஆகுங்கள் என சொல்லியிருந்தேன்.

அதன் பின்னர்.. என்னை சந்தித்த பலரும்
"மழை காலத்துல நேரத்தோட போனா அங்க போய் சும்மா இருக்கனும். நல்லா நோவு வந்தோன போனா அம்புலன்ஸ்ல ஏத்திஉடுவாக போய் இறங்க பிள்ள பிறந்திடும் அடுத்த நாள் பின்னேரம் வீட்ட...."‌ என கூறிச் சென்றார்கள்... அவ்வாறு கூறியவர்களில் பாமரர்கள் உட்பட அரச பதவிகளில் உள்ளோரும்‌ அடங்குவர்....
எனவேதான் இது மக்களுக்கு போதிய தெளிவின்மையின்‌வெளிப்பாடு‌ என்பது நன்கு புரிகிறது....

யுனிவர்சிட்டியில் கடைசி வருடம்...
மட்டக்களப்பு ஹொஸ்பிட்டலில் டெலிவரி வாட்டில் பயிற்சி.....
அப்போது இரத்தப்போக்கால் ஏற்பட்ட பல அசம்பாவித சம்பவங்கள் இப்போதும் கண் முன்னே நிற்கிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவற்றில் சிலவற்றை மாத்திரம் கூறுகிறேன்.

சம்பவம் 1.
ஒரு நாள் அதிகாலை 3 மணியளவில் ஈ டீ யூ டொக்டர் டெலிவரி வாட் டொக்டருக்கு கோல் எடுத்தார். Home delivery and PPH come immediately என்றதும் அழைப்பு நின்றது.

ஈ டீ யூவுக்கு ஓடினோம்.

30‌ வயது பெண் ஒருவர். வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார்கள். பிரசவ வலி தெரியாதிருக்க நாட்டு சாராயம் வேறு.... அம்மாவின் அருகே செல்ல முடியாதளவு வாசம்....
இரத்தம் நிக்காமல் ஓடவே... அருகிலுள்ள சிறிய ஹொஸ்பிட்டலுக்கும் செல்லாமல் நேரடியாக மட்டக்களப்புக்கே வந்ததால் வரும் நேரம் முழுக்க இரத்தம் ஓடி‌... குறை உயிராய் வந்து விழுந்ததால் பேசவும் முடியவில்லை.
Pressure மிக குறைவு... நாடித்துடிப்பு‌ பிடிபடவேயில்லை....
வெளிறிப்போய் கிடந்தவளை எமனிடமிருந்து பறித்தெடுக்க போடப்பட்ட சேலைன்கள் ஏராளம்...

இந்த நிலையில் அவளது‌‌ இரத்தம் எடுத்தெல்லாம் பொருத்தம்‌ பார்த்து இரத்தம் ஏற்ற நினைத்தால் எமன்‌ வென்றுவிடுவான். எனவே உடனடியாக "ஓ-நெகடிவ்" இரத்தங்கள் வேகமாக செலுத்தப்பட அதன் பின்னரே கண் விழித்தால்.....

அதன்பின்னர்‌ அவரை முழுதாக குணமடையச் செய்து‌ வீட்டுக்கனுப்பியது வரலாறு....

சம்பவம்: 2
சூல்வித்தகம் கற்பப்பையின்‌ மேல்பகுதியில் அமைவதே இயற்கையும்‌ பாதுகாப்பானதும் ஆகும்.‌ (அதிலும் பல கோளாறுகள் உள்ளன)

ப்ளசென்டா ப்ரீவியா என்பது சூல்வித்தகம் கற்பப்பை வாசலை அன்மித்ததாக அமைவதை குறிக்கும்.
இதனால்‌ அடிக்கடி இரத்தப்போக்கு ஏற்படும். ஆனால் வலி இருக்காது, வேறு காரணமும் இருக்காது. சிலவேளை திடீரென ஊற்றும்‌ இர்ததத்தை கட்டுப்படுத்த ஒரே வழி அவசரமாக வயிற்றை வெட்டி குழந்தையையும் வெளியில் எடுத்துவிட்டு இரத்தக்குழாய்களையும்‌ கட்டி கற்பப்பையையும் அகற்றுவதே....
சொல்வதற்கு இலகு... ஆனால் டெலிவரி வாட்டை பொருத்தவரை அது ஒரு எரிமலை போல... எப்போது... எப்படி... எந்தளவு என யாரும் அறிய மாட்டோம்.
4/5 பைன்ட் ரத்தத்தை சேமித்து வைத்துக்கொண்டு திரிவோம்......
உறவினர்கள் கூட வீடு சென்று உறங்கிடுவர்... ஆனால் அங்குள்ள ஊழியர்களோ பரிதாபம்....

அவ்வாறான நிலை உள்ளவர்கள் சிறிதளவு இர்த்தம் பட்டாலும் உடனடியாக வைத்தியசாலை செல்ல வேண்டும்.
ஆனால் ஒரு பெண்ணுக்கு அதிக இரத்தப்போக்கு இருந்தும் கூட அருகிலுள்ள ஹொஸ்பிட்டலுக்கு செல்லாமல் இன்னுமொருநாள் நள்ளிரவுக்குப் பின் மட்டக்களப்பு ஈ டீ யூ வை அடைந்தார்.

தாயின் இரத்தம் குறையும் போது முதலாவது நிகழ்வு பிள்ளையின் இரத்த ஓட்டம் குறைவதே....

குற்றுயிராக வந்தடைந்த தாயை உடனடியாக பரிசோதித்து சிகிச்சை ஆரம்பித்தபோது அவரது குழந்தை இறந்திருந்தது.
இறந்த குழந்தையை வெளியே எடுத்ததும் அந்த தாயை காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பியதும்‌ வேறு கதை.....

சம்பவம் 3.
பேபி சுகர் இருக்கும்போது காரணமே தெரியாமல் குழந்தை இறக்கும் வாய்ப்பு அதிகம். இதனால்‌ அவர்களது குழந்தைகளை டேட்டுக்கு முன்னர்‌ பிரசவிக்க வேண்டும். இவ்வாறு சொல்லி அனுப்பப்பட்ட தாயார் ஒருவருக்கு வைத்தியர் சொன்ன கிழமையில் எந்த நாளிலும் பிரசவிக்க விருப்பம் இல்லை. அதனை அவர் வைத்தியர்களிடம் சொல்லவும் இல்லை. அவரது நம்பிக்கைக்கு ஏற்ப மதம்சார் நபர்களிடம் நாள் குறித்து அந்த நாள்தான் ஹொஸ்பிட்டலுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்து‌‌ கிளினிக் வராமல் ஒளிந்து வெளியூரும் சென்று... மிட்வைப்ம் தேடி அழைந்து இறுதியாக‌ 3 கிழமைகள் தாண்டி பிள்ளை துடிப்பு இல்லை‌ என வந்த போது பிள்ளை இறந்து சில நாட்களாகியிருந்தன....
இறந்த குழந்தையை பிரசவிக்க அந்தத் தாய் பிரசவ அறைக்கு செல்லும்போது தாய்க்கும் எமக்கு‌ம் ஏற்படும் அந்த மன அழுத்தங்கள் வார்த்தைகளால் கூற முடியாதவை.......

இப்படியான சரித்திரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி ரத்தம் ஓடினா என்ன அதான் ரத்தம்‌ ஏத்தி வீட்ட போறாகதானே என கேட்பது புரிகிறது...
உரிய வேலைக்கு சென்று அட்மிட் ஆகி பிரசவித்து இரத்தம் ஏற்றுவது வேறு...
இப்படி‌ எமெர்ஜென்சியாக‌ அதிக இரத்தம் ஓடிய பின் அதிக இரத்தம்‌ ஏற்றுவதால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்....

அத்தோடு அந்த இரத்தம் ஓடியதால் உங்களது முன் கபச்சுரப்பயின் இரத்த ஓட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு இறக்க வாய்ப்புகள் அதிகம். இது சீஹான் சின்ட்ரோம் எனப்படும்.

's .
பிரசவத்தின்போது ஏற்படும் ஓமோன் மாற்றங்களால் முன் கபச்சுரப்பியின் பருமன் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும். ஆனால் அதன் இரத்த ஓட்டம் பெரியளவில் அதிகரிப்பதில்லை. எனவே கற்பவதியில் இரத்த அளவு குறையும் போது இந்த சுரப்பிக்கு‌ போசனை மற்றும் ஒட்சிசன் கிடைப்பது பெரியளவில் பாதிக்கப்பட்டு அதன் கலங்கள் இறக்கும். இதனால்‌ பல அத்தியவசய ஓமோன்கள் சுரக்காமல்‌ போகும்.

பிரசவத்திற்கு முன்னரோ, பின்னரோ ஏற்படும் இரத்த இழப்புகள் இந்த நிலையை ஏற்படுத்தும்.

இதனால்‌
1. இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக குறவாக‌ இருக்கும். இதய துடிப்பு அதிகரிக்கும்
2. இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறையும்.
3. இரத்தத்தில் தொடர்ச்சியாக சீனி குறைவாகவே இருக்கும்
4.பிரசவத்தின் பின்னர் பொதுவாக 2/3 நாட்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஆனால், பொதுவாக இந்த சீஹான் சின்ட்ரோமினால் பாதிக்கப்பட்டவர்களும் தாய்ப்பால் சுரப்பு குறைவு/ சுரப்பில்லை‌ என்பதையே முதலில் உணர்வார்கள்.

இந்த அளவு பாரதூரமாக பாதிக்கப்படாதவர்கள்...
1.சில மாதங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பும் மாதவிடாய் திரும்பாமையை உணர்வார்கள்.

2. தைரொய்ட் சுரப்பு குறைந்து
உடல் சோர்வு, முடி மெல்லியதாதல், முடி உதிர்வு, நிறை அதிகரிப்பு, மலச்சிக்கல், கவனச்சிதறல், மறதி, உடல் குளிர்ச்சி .......

3. வளர்ச்சி ஓமோன்குறைவால்‌ தசை பலவீனம்....

இன்னும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி உயிராபத்து வரை கொண்டு செல்லும்.

எனவே, பொறுப்புடன் நடந்துகொண்டு
வர முன் தடுப்பதே சிறந்தது.

தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படுமாயின் உரிய வைத்திய ஆலோசனையை பின்பற்றி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே வழி....

நன்றி
டொக்டர்: MNF.Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

Address

Valaichchenai

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. MNF. Mufliha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share